
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரண பணிகளில் ஈடுபட அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் மழை, வெள்ள சேதம் குறித்தும், நிவாரண நிதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கும் வகையில் நாளை நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகிழக்குப் பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் 68 ஆயிரத்து 652 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, சேதமான பயிர்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் 20ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படுவதோடு, பல திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.