"தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - கருணாஸ் வலியுறுத்தல்

"தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" -  கருணாஸ் வலியுறுத்தல்

பீகார் மாநிலத்தை போன்று தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முக்குலத்தோர் புலிபடை நிறுவனர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில்  முக்குலத்தோர் புலிபடை நிறுவனர் நடிகர் கருணாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கிராமங்களில் கொடியேற்றி வைத்தார். 

தொடர்ந்து அரூரில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர் :-

“வருகிற 27-ம் தேதி மருது சகோதரர்கள் நினைவை போற்றும் வகையிலும், 30-ம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்கின்ற வகையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டோம்.  

பலமுறை நான் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதே, பீகார் மாநிலத்தை போன்று, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்பதுதான் எனக் கூறினார்.

மேலும்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 20,000 நாட்கள் மேல் சிறையில் கொடுமைகளை அனுபவித்துள்ளார். அவரை தியாக உணர்வை போற்றும் வகையில், எதிர்கால சந்ததிக்கு நினைவு கூறும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். எனவும் கூறினார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994-ம் ஆண்டு கள்ளர், மறவர், அகமுடையர் சமூகத்தை, தேவரினம் என அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரினார். 

தொடர்ந்து, “பாஜக என்பது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத சிந்தாந்தம். இதனை தொடக்கத்தில் இருந்தே நான் எதிர்த்து வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக, தன்னிச்சையாக, தனித்துவமான முன்னேற்பாடுகளை செய்தவர் என்பது நாடறியும். 

ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அதற்கு தலைமை ஏற்றவர்கள் எந்தெந்த தீர்மானத்தை எல்லாம் வரவேற்றார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நாடே அறியும். இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி பிரிந்து இருக்கிறது என்பது 99 சதவீதம் யாருக்குமே நம்பிக்கை இல்லை”, எனத் தெரிவித்தார்.

 “அமலாக்கத் துறையின் நடவடிக்கை என்பது இந்த பாஜக ஆட்சியில் தான், அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியிலே சோதனை நடத்தி வருகிறார்கள்.  பாஜகவை சார்ந்தவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதில்லை. 

பாஜக யாரை தன் வசப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ?  யாரை எதிர்க்கட்சியாக நினைக்கிறார்களோ? எந்த அரசை கவிழ்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்கள் மீதுதான் அமலாக்கத்துறை சோதனை ஏவப்படுகிறது.  

இந்த அமலாக்கத்துறை என்பது பாஜகவின் ஏவுதுறை என்று தான் சராசரி மக்களும் பார்க்கிறார்கள். முக்குலத்தோர் புலிப்படை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் அல்ல. 
இனவாதிகள் கடந்த 45 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்து வருகிறது. 

உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்டும் கூட தண்ணீர் திறக்காத ஒரு அரசு, ஆட்சி இந்தியாவிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற காட்சிகளை மத்திய அரசும் ரசித்து வருகிறது. 

டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. இதுபோன்ற சூழலில் நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மொழி ரீதியாக, இன ரீதியாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நம் அடிப்படை உரிமைகள். இதில் ஒரு கட்சியினர் ஆதரிப்பதும் ஒரு கட்சியின் எதிர்ப்பதும், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சுயநல அரசியல். எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு வழியில்லாமல், குழி தோண்டிப் புதைக்கிறோம் என்பதை உணர வேண்டும். 

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை கூண்டுக்குள் வைத்திருப்பது இந்தியாவிற்கு அவமானம். இந்த பிரச்சினை மக்களை சமுதாய ரீதியாக,  ஜாதி ரீதியாக, மத ரீதியாக இன ரீதியாக, சுயநல அரசியலுக்குள் அடைத்து வைத்திருப்பதன் வெளிப்பாடு”,  என தெரிவித்தார்.

இதையும் படிக்க   |  டிக்கெட் முன்பதிவில் சிக்கல்: ரசிகர்கள் குற்றச்சாட்டு..!