புரட்டாசி மாதம் துவங்கியதால் களையிழந்த கால்நடை சந்தை.!

புரட்டாசி மாதம் துவங்கியதால் களையிழந்த கால்நடை சந்தை.!

புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, மானாமதுரை கால்நடை சந்தை கலையிழந்து காணப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புரட்டாசி மாதம் பிறந்ததை அடுத்து சந்தைகளில் ஆடு, கோழி வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது.

திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும், கால்நடை சந்தையில் ஆடு, கோழி, சேவல், வாத்து உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படும்..

திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள பெத்தானேந்தல், மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் தவிர ஆடு, கோழி, சேவல்களும் வளர்த்து விற்பனை செய்கின்றனர். வாரம்தோறும் சந்தையில் ஆடுகளை விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம், சாதாரணமாக சந்தைகளில் 300 முதல் 1000 ஆடு, கோழிகள் வரை விற்பனையாகும், புரட்டாசி மாதத்தில் விரத நாட்கள் அதிகம் வருவதால் இறைச்சி அதிகளவில் விற்பனை ஆகாது.

இன்று முதல் புரட்டாசி மாதம் பிறந்ததால் வாரச்சந்தையில் ஆடு, கோழி குறைந்த அளவில் பொதுமக்கள், வியாபாரிகள் வந்திருந்தனர். மேலும் கடந்த இரு நாட்களாக திருப்புவனத்தில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வர வில்லை.

இன்றைய சந்தையில் 500க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. பத்து கிலோ எடை கொண்ட ஆடு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. 25 கிலோ எடை கொண்ட கிடா 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.

வாரச்சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்ய ஆடு ஒன்றிற்கு 27 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை முதலே விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்‌.

இதையும் படிக்க   |  சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ் !!