தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக் கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் சேர்த்திட கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையேற்ற, மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவித்தல் என்ற நோக்கத்தினை கருத்தில் கொண்டு சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மற்ற பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.