டிசம்பர் 20: மக்களே உஷார்...8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

டிசம்பர் 20: மக்களே உஷார்...8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்த மாண்டஸ்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து, வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிபடியாக வலுப்பெற்று கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மாண்டஸ் புயலாக உருமாறியது. இந்த புயலில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் தமிழகத்தில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. அதன்பின்னர், சென்னை மாமல்லபுரத்தில் கரையை கடந்த மாண்டஸ் புயல் படிப்படியாக வலுகுறைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே மாறியது. இந்த புயலை தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பொழிந்து வந்தது. 

இதையும் படிக்க: ஆவின் நெய் விலை: கண்டனம் தெரிவித்த பால் முகவர்கள்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

கனமழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அதன்படி, 16.12.2022 முதல் 19.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வருகிற 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சென்னை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.