சென்னை தினம்.. இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளுவது எப்படி?

சென்னை தினம்.. இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளுவது எப்படி?

சென்னை தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இன்றும் நாளையும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்ம சென்னை, நம்ம பெருமை

ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரம் தோற்றுவிக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 383வது சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,  நம்ம சென்னை, நம்ம பெருமை என்ற பெயரில்  2 நாள் சிறப்பு கலை நிகழ்ச்சிகளுக்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சி

அதன்படி, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இன்றும் நாளையும் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை,பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. இவ்விரு நாட்களிலும், தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா, சென்னையின் தொன்மை குறித்த புகைப்பட கண்காட்சிகள், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்க ஒன்லைன் வசதி

மேலும், இணைய தளம் வாயிலாக சென்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில், ஓவியம், புகைப்படம், குறும்படம், சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. இதற்கான போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் சென்னை மாநகராட்சி இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்

இதனிடையே, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளதை யொட்டி, இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் வரும் 22ஆம் தேதி மாலை 6 மணி வரை, பெசன்ட் நகரில் 7ஆவது நிழற்சாலையில் இருந்து 6ஆவது நிழற்சாலை வரை, எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.