அயோத்தியா மண்டபத்தை ஒப்படைக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியா மண்டபத்தை நிர்வாகிக்க தக்கார் நியமித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக விசாரணையை துவங்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியா மண்டபத்தை ஒப்படைக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது.

அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சுவாமி சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டு வரும் வகையில் தக்காரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜம் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி வேலுமணி  உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு  வாதங்களை கேட்டறிந்த  தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர்.

இந்த நிலையில் கோவில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல் அயோத்தியா மண்டபத்துக்கு தக்கார் நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும் ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக விசாரணை நடத்தலாம் என அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முறையான நடைமுறைகளை பின்பற்றி, அனைத்து குற்றச்சாட்டு குறித்தும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற வேண்டும் எனவும் சமாஜத்துக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி நீதிபதிகள், அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜத்திடம் ஒப்படைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.