சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி...! தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர்..!

சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி...! தொடங்கி வைக்கவுள்ள முதலமைச்சர்..!
Published on
Updated on
2 min read

46 வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 

புத்தக கண்காட்சிக்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 800 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் திருநங்கைகளுக்காக ஒரு அரங்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சி தொடர்பாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், 46 வது சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 46 வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியும், அதே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என தெரிவித்தனர்.

மேலும், புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகளுக்கு என்று ஒரு அரங்கை ஒதுக்க முடிவு செய்து இருக்கிறோம்.தினசரி காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புத்தக கண்காட்சி  தொடக்க விழா நிகழ்வில் 2023 ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளர்களுக்கான விருதையும், பபாசி விருதுகளையும் தமிழக முதலமைச்சர் வழங்க இருக்கிறார். கடந்த ஆண்டு பொங்கலுடன் புத்தக கண்காட்சி நிறைவடைந்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு பிறகும் புத்தக கண்காட்சியை நடத்தும் விதத்தில் 22 ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதியின் கனவு திட்டமான புத்தக பூங்காவுக்கு இடம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார், அதனை இந்த ஆண்டு ஏற்படுத்திக் கொடுப்பார் என்று நினைக்கின்றோம். அவ்வாறு அந்த இடம் வழங்கப்படும் போது, போதுமான இடவசதி தங்களுக்கு கிடைக்கும் என்றும் மேலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் அன்று நீதியரசர் மகாதேவன் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com