வரும் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 திட்டம் அறிவிப்பு...!

வரும் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 திட்டம் அறிவிப்பு...!

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வருகின்ற 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் திறந்த வேனில் மக்கள் மத்தியில் பேசிய அவர், அரசின் இரண்டாண்டு கால சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும் நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு பெற்று தரப்படும் என குறிப்பிட்டார். 

இதையும் படிக்க : ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

தேர்தல் வாக்குறுதிகள் மிச்சமிருப்பதை மறக்கவில்லை என்று கூறிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்ணாடி அணிந்து அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் நையாண்டி செய்தார்.  

தொடர்ந்து ஈரோடு கருங்கல்பாளையத்தில்  ஈவிகேஎஸ்ஸை ஆதரித்து  பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் கடந்த ஆட்சியளார்கள் கஜானாவை காலி செய்து விட்டு சென்றதால் மகளிருக்கு உரிமை தொகை வழங்குவதில் காலதாமதம்  ஏற்பட்டுள்ளதாக கூறினார்.