பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!.

நாளை பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!!.

சென்னையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கையொட்டி மேற்கொள்ளப்படும் காவல்துறை கண்காணிப்பு பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.  சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நடைபெறும் வாகன சோதனையை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் 2 ஆயிரம் என்கிற வீதத்தில் அதிகரித்து வருகிறது எனவும், தொற்றை குறைக்க அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் முறை கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் சங்கரைய்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக கூறிய அவர், தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை 22 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஊரடங்கை மக்கள் மீது சுமத்தி பொருளாதார நெருக்கடிக்கு மக்களை தள்ளக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார் எனவும் கூறினார்.