"மானத்தை பற்றி கவலைப்படாதோரின் விமர்சனங்களால் கவலை இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

"மானத்தை பற்றி கவலைப்படாதோரின் விமர்சனங்களால் கவலை இல்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

அதன்படி இன்று கரூரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடியில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ரூ.581.44 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.28.60 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எந்த இலக்கையும் முடித்துக் காட்டக்கூடியவர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

கடல் இல்லாத கரூரில் கடல் அலையை போல் மக்கள் திரண்டுள்ளதாகவும், பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைச்சர்கள், அதிகாரிகளுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்றும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக செய்த சாதனைகள் மன நிறைவை அளிக்கிறது என்றும், அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல், மக்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிவிதாக உரையாற்றினார்.

தொடர்ந்து, மானத்தை பற்றி கவலைப்படாத மனிதர்களின் விமர்சனத்தை பற்றி கவலைப்படவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிவதாகவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களால் பயன்பெற்ற மக்களிடம் சென்று கேளுங்கள் என்று முதலமைச்சர் கூறினார்.