ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்?  அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்?  அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியான நிலையில், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. அத்துடன் வேலூர் ஆவினில் பால் திருட்டு சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து ஆவினில் என்ன நடக்கிறது என்பது  குறித்து  விளக்கம் அளித்திருக்கிறார் பால் வளத்துறை அமைச்சர் மனோ தஙகராஜ்.

இன்று அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்பத்தூர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக  பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறினார். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை எனவும் அவர் திட்ட வட்டமாக மறுப்பு  தெரிவித்தார்.  ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயார் என்றார் அமைச்சர்

மேலும், அம்பத்தூர் ஆவினைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார். கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் இருந்த உற்பத்தியை விட இந்த ஆண்டு 10 சதவீதம் உற்பத்தி அதிகரித்து விற்பனையும் அதற்கேற்றவாறு அதிகரித்திருக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், வேலூர் ஆவினில் 2 ஆயிரத்து 500 லிட்டர் பால் திருட்டு என புகார் முற்றிலும் பொய்யானது என தெரிவித்தார்.  வேலூரில் ஆவின் நிறுவனத்தில் ஒரே எண்களைக் கொண்டு இயங்கி வந்த வாகனங்களையும் அந்த குற்றச்செயலில்  ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் எனவும்  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.