விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

காங்கேயத்தில் ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பகவதிபாளையம் பிரிவில் வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் ஈடுபட்டு வந்தனர். இதில் 60 பெண்கள் 90 ஆண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்பினர் கட்சி நிர்வாகிகள் விவாத சங்கத்தினர் நேரில் சந்தித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று காங்கேயம், வெள்ளகோயில் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் பேக்கரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்திற்க ஆதரவு தெரிவிக்க வந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்து ரோடு பிரிவு என்று கூறப்படும் கோவை, கரூர், தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்களாக இந்த சாலை மறியல் போராட்டம் நீடிதது.

"பரப்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் சமச்சீர் பாசனம் மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டும். வழி நெடுகிலும் உள்ள தண்ணீர் திருட்டை தடுத்து சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும்" உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்று கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!