கோவை சிறையில் வார்டன் கைதிகள் மோதல் விவகாரம்; அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கோவை மத்திய சிறையில், வார்டன்களால் தாக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த  தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாய் செங்கையம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கோவை சிறையில் கைதிகள் - வார்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை பார்த்து தங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தினேஷை சந்தித்த போது, அவர் வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததும் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது மகன் உள்பட ஏழு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ள தனது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நான்கு சிறை வார்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான ஏழு கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், 7 கைதிகள் மற்றும் 4 வார்டன்களின்  மருத்துவ அறிக்கைகளை செப்டம்பர் 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத்தரப்பு உத்தரவிட்டு, விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!