மளமளவென சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம் ...  கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெற விவசாயிகள் வலியுறுத்தல்...

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் நீர் மட்டம் 78 அடியாக சரிந்தது.  

மளமளவென சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம் ...  கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெற விவசாயிகள் வலியுறுத்தல்...
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12 ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 96.81 அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது, 78.31 அடியாக குறைந்துள்ளது. தினமும் பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி திறக்கப்பட்டு வருவதால் நீர் மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.25  அடி வீதம் குறைந்து வருகிறது.
 
மேலும், நீர் இருப்பும்  60.78 டி.எம்.சி யில் இருந்து 40. 29 டி.எம்.சியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம்  78.31 அடியாக உள்ள நிலையில்,  "டெட் ஸ்டோரேஜ்" எனப்படும் குறைந்த பட்ச நீர் இருப்பு  30 அடியாக இருப்பு வைக்கப்பட்டு, மீதமுள்ள 48.31 அடி நீரை மட்டுமே பாசனத்திற்கு பயன் படுத்த முடியும். இதன் படி தற்போதைய நீரைக் கொண்டு இன்னும் 35 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீர் மற்றும் பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே கர்நாடகம் வழங்க வேண்டிய மாதாந்திர விகிதாச்சார நீர் அளவை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.