கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் பலி... அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்...

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்று அலையில் சிக்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் பலி... அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்...

நாமக்கல் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் கோகுல் (19)  சென்னை தரமணியில் உள்ள விடுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பிரிண்டிங் டெக்னாலஜி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கோகுல் தனது நண்பர்கள் 10 பேருடன் மெரினா கடற்கரைக்கு சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் மெரினா நீச்சல் குளம் பின்புறம் உள்ள கடல் பகுதியில் தனது நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனே போலீசாருக்கும், மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் கல்லூரி மாணவன் கோகுலை மீட்கும் பணயில் தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஹெலிகாப்டர் உதவியுடன் மாணவனை தேட முயன்றும் மாணவன் கோகுலை மீட்க முடியாத சூழல் நிலவி வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் கோகுலின் நண்பர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு, மாணவன் கோகுலின் பெற்றோர்களுக்கும் தகவல் அளித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மாணவன் கோகுலின் உடல் அண்ணா நினைவிடம் பின்புறம் உள்ள கடற்பரப்பில் கரை ஒதுங்கியது.

இதனையடுத்து மீட்புக் குழுவின் உதவியுடன் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.