ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...பதாகைகளில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் என்னென்ன?

ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்...பதாகைகளில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் என்னென்ன?

ஆளுநர் ஆர். என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.    

ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்:

தமிழ்நாட்டை, தமிழகம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கூறி வரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர், மாணவியர் கல்லூரி முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆளுநரே எங்கள் மண்ணை விட்டு வெளியேறு என மாணவர்கள் கோஷமிட்டனர் .

தமிழ்நாடு பெயரை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்:

இதே போன்று, சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டி பகுதியில் உள்ள சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பாக, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு என்ற பெயரை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும், ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதையும் படிக்க: ஆளுநரை யாரும் தாக்கி பேசக்கூடாது...சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் போட்ட உத்தரவு!

கோஷங்களை எழுப்பி போராட்டம்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அரசு கலைக் கல்லூரி முன்பாக, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரைக் கண்டித்து கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு எங்கள் நாடு:

இதேபோன்று திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில், 3 இடங்களில்  போராட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி சார்பில் அரசு கல்லூரி வாயிலில் ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு எங்கள் நாடு என்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

GET OUT RAVI என்ற பதாகை:

இதேபோன்று, பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் தன் விருப்பத்திற்கு உரை நிகழ்த்திய ஆளுநரை, GET OUT RAVI என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர். இதேபோன்று, அண்ணா சிலை அருகே திமுகவினர் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.