பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் 12 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதேசமயம், காவல்துறை டிஐஜி பகலவன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த விபத்து தொடர்பாக, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெடிபொருள் கிடங்கு உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் தா மோ அன்பரசன் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் ஆறுதலையும் வேதனையையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடுமையாக காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும்,  காயமடைந்தவர்களுக்கு  உயர் சிகிச்சையளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  எதிர்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி,  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com