தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயமாகும் இட ஒதுக்கீடு...பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!

மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் கட்டாயமாகும் இட ஒதுக்கீடு...பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி பொது பிரிவினருக்கு 31 சதவீதமும், எஸ்.டி பிரிவினருக்கு 1 சதவீதமும், எஸ்.சி பிரிவினருக்கு 18 சதவீதமும் எஸ்சிஏ இருப்பின் அவர்களுக்கு 3 சதவீதமும் இட ஒதுக்கீட்டும், எம்.பி.சி பிரிவினருக்கு 20 சதவீதமும், பி.சி. எம் பிரிவினருக்கு 3.5 சதவீதமும், பி.சி பிரிவினருக்கு 26.5 சதவீதம் என்ற அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, முதலில் பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மேல்நிலைப்பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.