தமிழக மாவட்டங்களில் திடீரென கனமழை...  குறுவை நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகள் கவலை...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக மாவட்டங்களில் திடீரென கனமழை...  குறுவை நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகள் கவலை...

தஞ்சாவூர் மாவட்டத்தில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், குறுவை நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகள், தற்போது பெய்த மழையால் கவலை அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணத்தட்டை, வதியம், அய்யர்மலை, மருதூர் ஆகிய இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த இடியுடன் கனமழை பெய்தது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், பழைய திண்டுக்கல் ரோடு, வெங்கமேடு, காந்தி கிராமம், தான்தோன்றிமலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழை நீருடன் சாக்கடை மற்றும் கழிவுநீர் கலந்து ஓடியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெரசா கார்னர் பகுதியில் குடிசை வீட்டில் வசித்த 80 வயது மூதாட்டி காளியம்மாள், மழை நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். மூதாட்டியின் சடலம் சாலையில் கிடந்ததால், அப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர், கூந்தலூர், குருபீடபுரம், வலசை, எறஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால், சம்பா சாகுபடி மற்றும் மானாவாரி பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேங்கிய மழைநீரில் துள்ளி குதித்து, அபபகுதி சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர்.