தித்திக்கும் தீபாவளி... தலைவர்கள் வாழ்த்து...

தித்திக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் ஆர்.என்.ரவி. உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தித்திக்கும் தீபாவளி... தலைவர்கள் வாழ்த்து...

நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அன்பு, தோழமை, சகோதரத்துவத்தை பரஸ்பரம் கடைபிடிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த நன்னாள் நமக்கு வழங்குவதாகவும், உண்மையில் இது நமது வளம் மற்றும் மகிழ்ச்சியை பிறருடன் பகிா்ந்துகொள்ளும் தருணமாகும் எனவும் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வாய்மையும், அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை நமக்கு தீபாவளி திருநாள் உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்லவும், அறியாமை என்னும் நிலையிலிருந்து மேலான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லவும், மனச் சோர்விலிருந்து விடுபட்டு பேரின்பத்தைப் பெறவும், இந்த நாள் நமக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி இறைவனின் அருள் கிடைக்கட்டும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 19 மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, இந்த தீபாவளி திருநாள் நல்வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமது விருப்பம் என, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும், சிறந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், கொண்டுவர வாழ்த்துவதாக, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

இதைப்போல சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவரது வாழ்வின் சிக்கல்களும், தீமைகளும் அகன்று, நன்மைகள் சிறக்கும் நன்னாளாய்  தீபாவளி பண்டிகை அமையட்டும் என வாழ்த்தியுள்ளார். 

கிரகணத்தில் ஒளியை மறைக்கும் நிழல் போன்று, தமிழகத்தில் சமூகநீதி கிரகணம் நடக்கிறது என்றும், இது விரைவில் விலகி தீப ஒளி பரவும் எனவும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.