காங்., பாஜக. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்...அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்...வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!

காங்., பாஜக. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்...அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்...வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!

ராகுல் விவகாரம் குறித்து அவையில் பேசியதை, சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது வருத்தம் அளிப்பதாக கூறி, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கருப்பு ஆடை அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியபடி வந்தனர். 

இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்த ராகுல்காந்தி விவகாரம்...இருஅவைகளும் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான தண்டனை மற்றும் தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின்மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, பேச ஆரம்பித்தார். இதற்கு பா.ஜ.க. உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது

இதனைக் கண்டித்த சபாநாயகர் அப்பாவு, நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது சரியாக இருக்காது என்று கூறி, இருவரின் வாதத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, சபாநாயகரின் செயல் வருத்தம் அளிப்பதாக கூறினார்.