நாற்காலியில் அமர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.... கிராமசபை கூட்டத்தில் சர்ச்சை... 

பொன்னேரி அருகே கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நாற்காலியில் அமர்ந்ததால் சர்ச்சை. கிராம சபைக் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்கள் மக்களோடு அமர்ந்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் நிலையில் நாற்காலியில் அமர்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

நாற்காலியில் அமர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.... கிராமசபை கூட்டத்தில் சர்ச்சை... 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ள அம்சங்கள் குறித்து ஊராட்சி செயலர் எடுத்துரைத்தார். 

இதனையடுத்து ஊராட்சியில் உள்ள மக்கள் தங்களது குறைகளை எடுத்துரைக்க முற்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் அவரை தடுத்து நாங்கள் பேசி விட்டு புறப்படுகிறோம், அதற்கு பிறகு நீங்கள் விவாதித்து கொள்ளுங்கள் என்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது பொன்னேரி நகராட்சியின் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைப்பதால் 100நாள் பணியில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். 

முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் கிராம சபைக் கூட்டத்தில் மக்களோடு தரையில் அமராமல் நாற்காலியில் அமர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. வழக்கமாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் கிராம சபை கூட்டமாக இருந்தாலும் நாற்காலி போடாமல் தரையில் சம்மணமிட்டு அமரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மரபுகளுக்கு மாறாக நாற்காலியில் அமர்ந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மக்களின் குறைகளை கேட்காமல் சென்றது குறித்து சிலர் கேள்வி எழுப்பியதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.