கள்ள நோட்டு கும்பல் கைது...ரூ.1,42,600 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கள்ள நோட்டு கும்பல் மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 600 ரூபாய் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டு கும்பல் கைது...ரூ.1,42,600 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  பட்டுதறி நெசவு தொழில் பெருமளவில் நடைப்பெற்று வருவதால் பணப்புழக்கமும் அதிகளவில் உள்ளது. இதனிடையே இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பகுட்டை கிராமத்தில்  அதிகளவில் கள்ளநோட்டு புழக்கத்திலிருப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.=]

தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்படி மகுடஞ்சாவடி காவல்துறை ஆய்வாளர் இளங்கோ, உதவி ஆய்வாளர் ரகு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பகுட்டை கிராமத்திற்கு  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  தப்பகுட்டை பகுதியை சேர்ந்த பொண்ணுவேல் என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட மகுடஞ்சாவடி காவல்துறையினர் பொண்ணுவேலுவை துரத்திப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது கள்ள நோட்டு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கள்ள நோட்டு உனக்கு எப்படி வந்தது என போலீசார்  கேட்டதற்கு மாட்டையாம்பட்டி யைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கொடுத்ததாக கூறியுள்ளார். உடனடியாக மாட்டையாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்  என்பவரையும்  மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்தவர் சங்ககிரி தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சியை சேர்ந்த சின்னத்தம்பி என்பதும் தெரியவந்தது .

உடனடியாக பொண்ணுவேல், சதீஷ் , சின்னத்தம்பி ஆகிய 3 பேரையும் கைது செய்த மகுடஞ்சாவடி போலீசார் அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 600 ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்...

தொடர்ந்து கள்ளநோட்டு கும்பல் மூன்று பேரையும் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.. உழைப்பில்லாமல் பணத்தை சம்பாதிக்கலாம் என்று நினைத்த கள்ள நோட்டு கும்பல் மூன்று பேர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்....இந்த கள்ள நோட்டு சம்பவத்தில் மேலும் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...