கோவை: கைதுசெய்யப்பட்ட 6 பேர்...என்.ஐ.ஏ. சிறப்பு  நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?

கோவை: கைதுசெய்யப்பட்ட 6 பேர்...என்.ஐ.ஏ. சிறப்பு  நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன?

கோவையில் கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

என்.ஐ.ஏ.விசாரணை:

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, ஜமேசா முபின் கூட்டாளிகள் என 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 6 பேர்:

இந்த வழக்கு விசாரணையானது, சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்காக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரும் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன், சென்னை புழல் சிறைக்கு அழைத்துவரப்பட்டனர். 

இதையும் படிக்க: 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு... ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நீதிமன்ற வளாகம்:

இதனையொட்டி பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு  நீதிமன்ற வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன்  தீவிர சோதனை மேற்கொண்டனர். நீதிமன்றத்திற்குள் வருபவர்கள், செல்பவர்கள் என அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  

நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு:

இதனைத் தொடர்ந்து, கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன், பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் 6 பேரையும் நவம்பர் 22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 6 பேரும்  கோவை சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்டனர்.