நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு...திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு...திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி
Published on
Updated on
1 min read

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுவதாகவும்.,அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம் என்றும்.,கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வரையிலான வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்., மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், கேரளா தவிர்த்து பிற மாநிலங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து 100 சதவீத இருக்கைகளை கொண்டு இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்படலாம் என்றும்., தேவையான எண்ணிக்கையை கொண்டு அனைத்து வகையான படப்பிடிப்புகளையும் நடத்தலாம் என்றும்., படப்பிடிப்புகளில் பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்., ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com