தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம் இதோ

தமிழகத்தில் நாளை முதல் மேலும் ஒரு வாரத்திற்கு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம் இதோ

கொரோனா நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்களை பிரித்து, வரும் 28-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு நேர தளர்வுகளும், கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.23 மாவட்டங்களில் வாகன பழுது நீக்கும் கடைகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்கலாம்.

ஹார்டுவேர் மற்றும் செல்போன் உதிரி பாக கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உணவகங்கள் மற்றும் பேக்கரி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை  செயல்பட அனுமதிக்கப்படும்.

23 மாவட்டங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம் என்றும்,33 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி எனவும் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வாகன விற்பனை மற்றும் விநியோகஸ்தர்கள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி என தெரிவித்துள்ளார்.

கல்வி பொருட்கள், காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதைப்போல கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்குள் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு,சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து, 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதித்துள்ளது.

4 மாவட்டங்களில் அனைத்து வகையான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன், இதர தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

அழகு நிலையங்கள், சலூன்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடனும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் இன்றி திறந்த வெளியில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை விளையாட்டு போட்டிகள் நடத்தலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவு இல்லாமல் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம் என்றும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி எனவும் கூறியுள்ள தமிழக அரசு,11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்ச்சிகளுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com