ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக ஐ.பி.எஸ் அதிகாரி மீது புகார்...! டிஜிபி பதிலளிக்க உத்தரவு...!!

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக ஐ.பி.எஸ் அதிகாரி மீது புகார்...! டிஜிபி பதிலளிக்க உத்தரவு...!!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பழகி, கொலை மிரட்டல் விடுத்த புகாரில், துறை ரீதியான நடவடிக்கைக்கு தடை கோரிய ஐ பி எஸ் அதிகாரி  செல்வநாகரத்தினத்தின் வழக்கு குறித்து தமிழக டிஜிபி, சிபிசிஐடி  உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி பி.செல்வ நாகரத்தினம் 2019ம் ஆண்டு தம்மிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி தம்மை திருமணம் செய்துகொள்வதாக கூறி உடல் ரீதியான உறவில் இருந்ததாகவும் பின்னர் தம்மிடம் முறையாக பேசவில்லை எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் செல்வநாகரத்னம் மீது  கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் மூலம் டிஜிபிக்கு புகாரளித்தார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலிசார் செல்வநாகத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டிஜிபி சார்பில் செல்வ நாகரத்தினத்திற்கு மெமோ அனுப்பப்பட்டு, 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இதனை எதிர்த்து செல்வ நாகரத்தினம் சார்பில் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என கூறியிருந்தார். மேலும், தம் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். 

செல்வ நாகரத்னத்தின் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்ததை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தாம் திருமணமானவர் என்று தெரிந்தே, அந்த பெண் தம்முடன் பழகியதாகவும், அந்த பெண்ணை தாம் ஏமாற்றவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலிசார் நியாயமான முறையில் விசாரிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.  

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து தமிழக டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...!!