திமுக இன்னும் மாறவில்லை; அதிமுக மீதான அடக்குமுறையை திமுக அரசு உடனே நிறுத்தனும்: ஈபிஎஸ்

அதிமுகவுக்கு எதிரான அடக்குமைறயை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக இன்னும் மாறவில்லை; அதிமுக மீதான அடக்குமுறையை திமுக அரசு உடனே நிறுத்தனும்: ஈபிஎஸ்
Published on
Updated on
1 min read

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், அதிமுக அரசைத் தரக்குறைவாக விமர்சித்ததற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

 மாற்றாரை எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்துச் சுதந்திரம். அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைதளங்களில் நாகரிகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, தனக்குக் கீழ் உள்ள காவல் துறையினரை ஏவி வழக்குத் தொடுப்பது, கட்சியினரை விட்டு மிரட்டுவது போன்ற திமுகவினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும்போது, திமுகவினர் இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

 ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் எங்களுக்கு வாக்களித்தோருக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம் என்றார். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்திடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.

 திமுக அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்துச் சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து, இந்த அரசைத் தரக்குறைவாக விமர்சிப்பதாகக் கூறி வழக்குப் பதிவு செய்கிறார்கள்.

 இவ்வாறு, செய்தி தொலைக்காட்சி உட்பட, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 120 கட்சி உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள்.

 திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாகச் சந்திக்கக்கூடிய வல்லமை அதிமுகவிற்கும், அதன் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com