எக்காலத்திலும் மகளிர் வாக்குகள் திமுகவுக்கே - மு.க.ஸ்டாலின்

Published on
Updated on
1 min read

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால், நாற்பது தொகுதிகளையும் நாம் வென்றாக வேண்டும் என, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியிலான 72 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்காக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மகளிரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் திமுகவுக்குத் தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை என்றும் கூறினார்.

உதயநிதி இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, அணியின் பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருப்பதாகக் கூறிய அவர், இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்கிறது என்பதை இளைஞரணி மாநாட்டின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டும் நபர் பிரதமராக வேண்டும் என்றால் நாற்பது தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்று தெரிவித்தார். யார் வெற்றி பெறுவாரோ, அவரே வேட்பாளராக இருப்பார் என்றும், இந்த தொகுதிக்கு இவர் தான் என்று எந்த உறுதியும் இல்லை என்றார்.

இந்த கூட்டத்தில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக நேரு நியமனம் செய்யப்பட்டார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த மாநாடு திகழும் என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com