திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டது... ஆ.ராசா...!!

திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டது... ஆ.ராசா...!!

தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதோடு அறிவிக்கப்படாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைப்பது மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களை நேரில் ஆய்வு செய்வது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்றார். 

சாலை வசதி மேம்பாட்டு திட்டங்கள், கிராமப்புற விளையாட்டு பூங்கா, தடுப்பு சுவர் மற்றும் வடிகால் வசதி என பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த ஆ.ராசா காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பன் நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா இன்றி வசித்து வந்த 48 பயனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். 

இந்நிகழ்வில் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய ஆ. ராசா, “தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குடும்ப பெண்களுக்கு அறிவித்த மாதம் ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்காமல் மக்களை ஏமாற்றி விட்டதாக எடப்பாடி பழனிசாமி பெரிதாக குற்றம் சாட்டி பேசி வந்த நிலையில் தற்போது அதுவும் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் நேர வாக்குறுதிகள் மட்டுமின்றி அறிவிக்காத பல்வேறு மக்கள் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கொரோனா காலத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு மூன்று லட்சம் ரூபாயும் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ஐந்து லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம், அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சி” என்றார்.