"பிரதமரை குறை சொல்ல திமுகவினருக்கு தகுதி இல்லை" - வானதி சீனிவாசன்

மணமக்களை வாழ்த்துவதை தவிர மற்ற வேலைகளை முதல்வர் செய்கிறார்.

"பிரதமரை குறை சொல்ல திமுகவினருக்கு தகுதி இல்லை" - வானதி சீனிவாசன்

விஞ்ஞான பூர்வ ஊழலில் ஈடுபடும் திமுகவினருக்கு அப்பழுக்கற்ற பிரதமரை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவை டவுன்ஹால் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- 

 "ஆயுஸ்மான் பாரத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒன்னேகால் கோடி மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் மக்கள் பயன்பெற
சுகாதார துறை அதிகாரிகளுடன் இணைந்து, இன்று முதல் முகாம் துவங்கியுள்ளோம். இந்த முகாம்களை கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை அனைவருக்கும் கிடைக்க மாநில அரசு தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண்; என்மக்கள்; பயணம்'  முதற்கட்டத்தை நிறைவு செய்து, அடுத்த கட்டம் மேற்கு மண்டலத்திற்கு வர உள்ளது. கோவையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இந்த யாத்திரை நடைபெறும். அண்ணாமலையின் இந்த பயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற பிறகு பாஜக செயல்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பயணம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு உற்சாகம், புத்துணர்வை அளிக்கும்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பை எடுத்தால் மாமன்ற உறுப்பினர்கள் மிரட்டுகிறார்கள். போர்வெல் போட வசூல் செய்கிறார்கள். வீடு கட்ட தனியாக பணம் வசூல் செய்கிறார்கள். கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக இலஞ்சம் கேட்டால், உதவி செய்ய ஹெல்ப் லைன் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான தொடர்பு எண் இரண்டு நாட்களில்  மக்களுக்கு அறிவிக்கப்படும். 
யாரவது லஞ்சம் கேட்டு மிரட்டினால் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  

பிரதமர் மோடி எங்கு போட்டியிட்டாலும் அங்கு நானும் போட்டியிடுவேன் என் சீமான் கூறிய கருத்து குறித்து வினவியதற்கு:- 

"தேர்தலில் ஒரு கட்சி மற்றும் தலைவர் எங்கு போட்டியிடுவது என்பது அவர்களின் விருப்பம். பிரதமர் எங்கு போட்டியிடுகிறார் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும்”, என்றார். 

பாஜக ஆட்சியில் ஊழல் நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்திருக்கும்போது, திமுக ஊழல் செய்தது என கூற பாஜகவுக்கு தகுதியில்லை என விமர்சிப்பது குறித்து கேட்ட கேள்விக்கு : 

திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துவதை தவிர மற்ற வேலைகளை முதல்வர் செய்கிறார். திமுக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி. அப்பழுக்கற்ற பிரதமரை குறை சொல்ல திமுகவிற்கு தகுதியில்லை. பிரதமர் நேர்மையை விமர்சிக்க திமுகவிற்கு தகுதியில்லை.  

100 பேரில் 4 பேருக்கு தான் மகளிர் உரிமைத்தொகை வருகிறது. அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்க வேண்டும். அப்படி அறிவித்தால் நானே பூத்களில் அமர்ந்து அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வாங்கி தருகிறேன். பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது டிசம்பர் மாதத்தில் தெரியும். அப்போது எத்தனை புது நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்பதை பாருங்கள். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாண்டி யார் முடிவு எடுப்பார் எனத் தெரியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் முரண்பாடு இல்லை. மீடியாக்கள் குழப்பாமல் இருந்தால் போதும். நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதி என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்" என பதிலளித்தார். 

தொடர்ந்து பேசியவர், "மாணவர்கள் வன்முறையை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சாதி ரீதியாக குழந்தைகள் மனதில் நஞ்சு விதைக்கிறார்கள். நீட் விசயத்தில் போராடுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை தூண்டுகிறார். திமுக அரசும், அமைச்சர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி செய்யாமல் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். 

அதிமுக நீட்டை எதிர்த்தாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். திமுக ஆட்சியில் நீட்க்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க    | " சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பிரதமர் பதில் சொல்ல மறுக்கிறார்" - கே. எஸ். அழகிரி குற்றசாட்டு.