தி.மு.க.வில் தொண்டன் என்ற அடையாளம் தான் கெத்து... மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்...

தி.மு.கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தி.மு.க.வில் தொண்டன் என்ற அடையாளம் தான் கெத்து... மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்...

தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நம் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆழமாகச் சிந்தனை செய்து அற்புதமாக வடிவம் தந்த  திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம், அன்றும் இன்றும் என்றும் இளைஞர் பட்டாளத்தின் நம்பிக்கைக்குரிய அரசியல் இயக்கம் என்பது வரலாற்றுப் பேருண்மை. பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்ட அவரது நம்பிக்கைக்குரிய தம்பிமார்களும் நமது இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது எழுச்சியும் எண்ணத் தெளிவும் மிக்க இளைஞர்களாக இருந்தவர்கள். அவர்களின் பின்னே ஆயிரமாயிரமாய்த் தொடங்கி இலட்சோப இலட்சமாக இளைஞர்கள் திரண்டு அணி வகுத்தார்கள். திராவிட இன உணர்வை - தமிழ்மொழிச் சிந்தனையை - சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவை நாடெங்கிலும் நாள்தோறும் முழங்கினார்கள். தேர்தல் அரசியலுக்கு வர விரும்பாத தந்தை பெரியாரின் இலட்சியங்களை, பேரறிஞர் அண்ணாவும் அவரது ஆற்றல் மிக்க தம்பிமார்களும் அரசியல் இயக்கத்தின் வழியே, மக்களைத் திரட்டி, ஆட்சியைப் பிடித்து, தழுவிய இலட்சியங்களை முழுவதுமாக நிறைவேற்றிடத் தொடங்கினர். இளைஞர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கமாகத் தி.மு.கழகம் இமயமென உயர்ந்து நின்றது.


பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பையும் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்ற முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பேச்சும், எழுத்தும், செயல்திறனும் இளைஞர் பெரும்படையைக் காந்தமெனக் கவர்ந்திருந்தது. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணவர்கள் பலரும் கழகத்தின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தினர். தமிழாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களும், பேராசிரியர்களும் திராவிட இயக்க உணர்வை அவர்களுக்குச் சிறப்புடன்  ஊட்டினர்.


காலந்தோறும் இளைஞர்களைக் கவர்ந்து ஈர்க்கும் வலிமை கொண்ட கொள்கைப் பாசறையாக - பாடிவீடாக - குன்றின் மேலிட்ட விளக்காக- குறையாப் பொலிவுடன் விளங்குகிறது தி.மு.கழகம். நெருக்கடிகள், சோதனைகள், நெருப்பாறுகள், துரோகங்கள் என எதுவாக இருந்தாலும் கழகத்தை அரணமைத்து அயராத விழிப்புடன்  காத்து நின்றதும் நிற்பதும் ஈடிணையற்ற இளைஞர் பட்டாளம்தான். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காகக் கழகத்தின் சார்பில் இளைஞரணி தொடங்கப்பட்டது. அதன் செயலாளர் என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பெரும் பொறுப்பினை ஏற்றேன். கழகம் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும், கொள்கை முழக்கம் செய்யும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, இலட்சிய ஏடுகளைத் தாங்கிய படிப்பகங்கள் திறப்பது, நம் குருதியோட்டமான இருவண்ணக் கொடியை ஏற்றுவது எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தி இலட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்தோம். இந்தியாவிலேயே மிக அதிக அளவிலான இளைஞர்களைக் கொண்ட அரசியல் இயக்கத்தின் அணியாக தி.மு.கழகத்தின் இளைஞரணி நற்பெயர் பெற்றது. தீக்குண்டங்களைத் தாங்கிக் கடந்த தலைவர் கலைஞருக்கும் கழகத்திற்கும் உறுதுணையாக நின்றது.


அறிவியலும் அது சார்ந்த தகவல் தொழில்நுட்பமும் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிற இன்றைய நிலையில், இளைஞரணி மேலும் விவேகமான வேகம் பெற்றிருப்பதைக் காண்கிறேன். கழகத்தில் ஆண் - பெண் என இருபாலின இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கெடுத்து, அவரவர் வலிமைக்கேற்பப் பாய்ச்சல் காட்டி இயக்கத்தை வளர்க்கிறார்கள். தேர்தல் களத்திலாக இருந்தாலும் சமூக வலைத்தளத்திலாக இருந்தாலும் இன - மொழி எதிரிகளின் முகத்திரையைக் கிழித்தெறிகிறார்கள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முழுவதும் பயின்று, தெளிந்து, பக்குவம் பெற்று அரசியல் எதிரிகளுக்கு வலி தெரியாதபடி வாகாக ஊசி ஏற்றிடக் கற்றிருக்கிறார்கள். அதுபோலவே, மகளிரணியின் சார்பில் ஊர்தோறும் ஒரு சேனை உருவாகி, கருப்பு - சிவப்பு உடையில் நாளும் கழகப் பயிர் வளர்ப்பதைக் கண்டு அகம் மிக மகிழ்கிறேன்.


பொதுவாக, ஓர் அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், அதன் செல்வாக்கு சற்று சேதாரமடையும் வாய்ப்பு ஏற்படும். பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு எண்ணிய வேகத்தில் ஈடுகொடுக்க முடியாத நிலையில், ஊக்கம் சற்று குறைந்து சிறிது தேக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு மாறாக, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாள்தோறும் நல்ல வளர்ச்சி - இனிய ஏற்றம் - மனமார்ந்த வரவேற்பு. காரணம், இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமான முழுமையான ஆட்சி.


சட்டமன்றத் தேர்தல் களத்தில் கழகம் பெற்ற மகத்தான வெற்றியை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில், அவரது திருவடிகளில் காணிக்கையாக்கியபோது, “வாக்களித்தவர்கள் மகிழும்படியாகவும், வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என எண்ணும்படியாகவும் எங்கள் ஆட்சி நடைபெறும்” என்று தெரிவித்தேன். சொன்னதைச் செய்வோம் என்கிற முத்தமிழறிஞர் கலைஞரின் வாக்குப்படி, அன்று சொன்னதை இன்று செயல் முறையில் நிறைவேற்றி வருகிறோம்; நாளையும் தொடருவோம். நம்மைவிட நம் ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அசைக்க முடியாத அதிக நம்பிக்கை உருவாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை எனும் பேரிடர் காலத்திலும், மழை - வெள்ளப் பாதிப்புகளிலும், உடுக்கை இழந்தவன் கைபோல, உடனே ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய ஆட்சியின் மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 

எண்ணற்ற திட்டங்கள், புதிய புதிய சட்டங்கள், எளியோருக்கான ஏற்றமிகு செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் ஆட்சிச் சக்கரம் ஓயாமல் சுழல்கிறது. அதன் பலன், மக்களுக்குத் தெரிகிறது. அதனால், கழக அரசுக்கு மேலும் மேலும் ஆதரவு பெருகி வருகிறது. சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் நம் அரசியல் இலக்கணம். அதனால்தான், டிசம்பர் 18-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் இதே எழுச்சியுடன் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வினை அந்தந்த மாவட்டக் கழக - ஒன்றியக் கழக - நகரக் கழக - பேரூர்க் கழக - கிளைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டிட வேண்டும். அதற்குரிய படிவங்களைத் தலைமைக் கழகத்தில் பெற்று ஆர்வமிக்க இளையோரை - மகளிரை - புதியவர்களை உறுப்பினராக இணைத்து, சமூக அக்கறை கொண்ட பட்டாளமாக உருவாக்கிட வேண்டும். இளைஞரணி, மகளிரணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட கழகத்தின் துணை அமைப்பினரும் கொள்கை உணர்வுடன் புதிய குருதியோட்டம் கழகத்தில் உருவாகிட உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வினை நடத்திட வேண்டும்.

கழகத்தின் தலைவராக, மாநிலத்தின் முதலமைச்சராக உங்களில் ஒருவனான நான் இருந்தாலும், இருவண்ணக் கரை வேட்டி கட்டிய கழகத்தின் தொண்டன் என்பதுதான் எனது நிரந்தர அடையாளம். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அனைவருக்குமே அதுதான் எப்போதைக்குமான சொத்து - ‘கெத்து’. 

உயிருள்ளவரை ஒருபோதும் நீங்காத அந்த உறவை இளைய தலைமுறையினரிடம் உருவாக்கிடும் வகையில், கொள்கையை எடுத்துச் சொல்லுங்கள். நல்லவை அனைத்தையும் ஆற்றும் வகைப்படி செய்யுங்கள். கழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுத் தெருவெங்கும் பரப்புங்கள் . வீடு வீடாகச் சென்று புதிய புதிய  உறுப்பினர் சேர்ப்புப் பணியை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் மேற்கொள்ளுங்கள். எந்நாளும் கழகம் வென்றிட, தொடர்ந்து மேலும் மேலும்  வலிவும் பொலிவும் சேர்ப்பீர்!

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.