9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றிய திமுக…  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றிய திமுக…   அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இது தவிர இதர 28 மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதன் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. 9 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளைப் பொறுத்தவரையில், திமுக 6, காங்கிரஸ் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். 74 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்துக்கான தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதர 73 இடங்களில் திமுக 68, அதிமுக 1, மதிமுக 2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். 3 ஒன்றியங்களில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் தேர்தல் நடைபெறவில்லை.

ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவிகளைப் பொறுத்தவரை, நெமிலி ஒன்றியத்துக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதர 73 ஒன்றியங்களில் 62 திமுக, காங்கிரஸ் 3, அதிமுக 1, சுயேட்சை 2 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். போதிய உறுப்பினர்கள் வராததால் 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இது தவிர ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளை திமுகவும், கோவையில் அதிமுகவும் கைப்பற்றி உள்ளன. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை

இதர மாவட்டங்களில் காலியாக இருந்த 6 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகளில் திமுக 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வென்றுள்ளன. ஓரிடத்துக்கு தேர்தல் நடைபெறவில்லை. 13 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக 7, அதிமுக 1, பாமக 1, சுயேட்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளன. 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.