ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் நேற்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ''என் மண் என் மக்கள்" பாதையாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்து அவரும் சற்று தூரம் நடந்தார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சரியாக காலை 5.45 மணிக்கு கோவிலுக்கு வந்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

மேள-தாள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்குள் அழைத்துச்செல்லப்பட்ட அமித்ஷா முதலில் நந்தீஸ்வரர் சன்னதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளை தரிசனம் செய்த பிறகு சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டார். சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அவரது வருகையை ஒட்டி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு மாற்றி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதான நுழைவு வாயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே கோவிலில் இருந்தவர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அங்குள்ள வருகை பதிவேட்டிலும் கையெழுத்து இட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையொட்டி கோவில் வளாகத்தின் முக்கிய இடங்கள் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரும் கோவிலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமித்ஷா, இன்று மதியத்துடன் டெல்லி திரும்ப உள்ளார்.

இதையும் படிக்க:சென்னை; அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு!