ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் - தமிழ்நாடு மின்சார வாரியம்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் - தமிழ்நாடு மின்சார வாரியம்

தொடரும் 100 யூனிட் மானியம்

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 74 ஆயிரம் ஆதார் எண்கள், மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்தாலும் அரசாங்கம் தருகின்ற 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது தொடரும். ஒவ்வொரு மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.


மக்களுக்காக சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 811 மின் பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்

இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  இணைய வழியில் 4 லட்சத்து 56 ஆயிரம் பேர் சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி - தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


டிசம்பர் வரை கால அவகாசம்

நேற்று வரை மொத்தமாக 34 லட்சத்து 74 ஆயிரம் பேர் ஆதாருடன் இணைக்கபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆதார் எண்களுடன் மின் இணைப்பு எண்களை இணைப்பதற்காக டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழ்நாடு மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.