மின் கட்டண உயர்வை கண்டித்து....தமிழக அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய அதிமுகவினர்..!

மின் கட்டண உயர்வை கண்டித்து....தமிழக அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய அதிமுகவினர்..!

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மின் கட்டணம் உயர்வு:

மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. தனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதல், 
மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாக, தமிழகத்தில் மின் கட்டணம் 55 ரூபாய் முதல் ஆயிரத்து 130 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். எனினும், தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ஈ.பி.எஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு:

மின் கட்டணம் உயர்வையடுத்து, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் ஆன  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

மதுரை ஆர்ப்பாட்டம்:

அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில், அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 

ஈரோடு ஆர்ப்பாட்டம்:

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.

திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

திருவள்ளூர் ஆர்ப்பாட்டம்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதேபோன்று மற்ற மாவட்ட தலைநகரங்களிலும், அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.