காற்றழுத்த தாழ்வு பகுதி எச்சரிக்கை: படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள்....

காற்றழுத்த தாழ்வு பகுதி எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு  செல்லாமல், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

காற்றழுத்த தாழ்வு பகுதி எச்சரிக்கை:  படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள்....

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும்  இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், குளச்சல், முட்டம், மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் பாதுகாப்பாக, கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று,  நாகை  மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரை ஓரத்தில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 8ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட  நாட்டுப்படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன