மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து: வைகோ கண்டனம்!

மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து: வைகோ கண்டனம்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் மூன்று அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட  சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. 

இதனை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில்  மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடை படும் நிலைமை உருவாகி இருக்கிறது. சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை இரத்து செய்ததற்கு கண்டனத்தை தெரிவித்த அவர் மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும் எனவும் இதனை நியாயப்படுத்தவே முடியாது எனவும் கூறியுள்ளார்.

எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com