பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது தேவரின் தங்கக் கவசம்...!

பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது  தேவரின் தங்கக் கவசம்...!

மதுரையில் வங்கி பெட்டகத்தில் இருந்த முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.

மதுரை அண்ணாநகரில் உள்ள  ‘பாங்க ஆஃப் இந்தியா’ வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பர்.

அதிமுக உட்கட்சி பூசல்களால் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு கவசத்தை பெற்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:- 

அதிமுக தொடர்பான எல்லா வழக்கிலும் ஒபிஎஸ் மேல்முறையீடு செய்யும் நிலையில், தங்கக்கவச விவகாரத்தில் பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிட்டாரா என்ற கேள்விக்கு:- 

 "எங்கே சென்றிருந்தாலும் ஒபிஎஸ் தோல்வியை தான் சந்தித்து இருப்பார்.
தங்ககவச விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தால் தோல்வி கிடைக்கும் என்பதால் ஓபிஎஸ் வழக்கு தொடுக்கவில்லை",  எனக்கூறியதோடு, தேவர் குருபூஜை விழாவில் ஈபிஎஸ் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க   | ”மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல்பாடு” - டிடிவி