சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில் தான் வளர்ச்சி சரியாக இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கூலிப்படை முழுவதுமாக ஒழிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில் தான் வளர்ச்சி சரியாக இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில் தான் வளர்ச்சி சரியாக இருக்கும் என குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறிய அவர், இதற்கு அடித்தளமாக அமைதியை உருவாக்கியது உள்துறை தான் என பெருமிதம் தெரிவித்தார். வன்முறை, சாதி சண்டை, மதமோதல்கள், துப்பாக்கிச்சூடுகள் அற்ற ஆட்சிக்கு வித்திட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை எனவும், இரண்டும் முறையாக செயல்பட்டால் தான் தலைசிறந்தாக அரசாக திகழும் எனவும் முதலமைச்சர்  கூறினார்.

திருட்டு, பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாத அளவுக்கு காவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அரசியல், சாதி மதம் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். விமர்சனத்திற்கு இடம்கொடாமல், பணிகளை செய்வதோடு, போதை பழக்கங்களுக்கு சிறார்கள் அடிமையாவதை தடுத்திட வேண்டும் எனவும் கூறினார்.

திமுக ஆட்சியில் கூலிப்படைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என கூறிய அவர், சமூக நல்லிணக்கத்திற்கு ஊர்காவல் படைகளை அதிகம் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் விரைவில் புதிதாக 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.