மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...!

மகா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதேபோல் பல்லடத்தில் உள்ள உலகின் முதல் பிரசித்தி பெற்ற கோளறுபதி நவகிரக சிவன் கோட்டை கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

வேலூரில் உள்ள புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோல் மகா சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு களித்தனர். 

இதையும் படிக்க : இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் மயில்சாமியின் வீடியோக்கள்...!

தேனி மாவட்டம் கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில், மலைவாழ் குறும்பர் இன மக்கள், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு இக்கோயில் பூசாரி தன்னிடம் ஆசி வாங்கும் பெண்களுக்கு சாட்டையடி கொடுத்து ஆசி வழங்கினார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்பு பகுதியில் யோக நிலையில் காட்சியளிக்கும் சிவ பெருமானுக்கு சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு முழுவதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு 54 எண்ணிக்கையிலான ருத்ராட்ச மாலை வழங்கப்பட்டது.