தருமபுரி அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி கிடக்கும் சிசிடிவி கேமராக்கள் ...!

தருமபுரி அரசு மருத்துவமனையில்  பராமரிப்பின்றி கிடக்கும்  சிசிடிவி கேமராக்கள் ...!

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பின்றி இருக்கும் சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கடந்த 2004 ம் ஆண்டு துவங்கபட்டது. துவங்கபட்ட நாள் முதல் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது திருப்பத்தூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் புறநோயாளிகள் என சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

மேலும், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை மருத்துவ மனை வளாகத்தின் வெளியே விட்டு செல்கின்றனர். அதனைபயன்படுத்தி மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்கின்றனர். அதனை கண்காணிப்பதற்கு காவல் துறையினருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது.

இவ்வாறிருக்க, மருத்துவமனை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்த மருத்துவ கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனால் இருசக்கர வாகனங்களின் திருட்டு சம்பவம் வெகுவாக குறைந்து வந்தது. 

இந்நிலையில், தற்போது மருத்துவ மனையை சுற்றி உள்ள கேமராக்கள் அனைத்தும் பராமரிப்பின்றி தரையை பாரத்தும், வானத்தை நோக்கியும் செயலற்று உள்ளது. அதனால் மருத்துவமனை வளாகத்தில் ஏற்படும் திருட்டு, சமுக விரோத செயல் போன்றவற்றை கண்காணிக்க இயலாத நிலை உள்ளது. 

அதோடு, தற்போது பராமரிப்பின்றி இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து மீண்டும் செயல்படுத்தி அலட்சியமாக செயல்படும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மருத்துவமனைகள் முறையான பராமரிப்பின்மை  காரணமாக அங்கீகாரம் ரத்து செய்திருக்கும் நிலையில் தற்போது தர்மபுரியில் மேலும் ஒரு மருத்துவமனையில் இதுபோன்று முறையான பராமரிப்புகள் இல்லாது செயல்படுவது குறிப்ப்பிடத்தக்கது.  

இதையும் படிக்க     | 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!