இரு தலைமைகளையும் புறக்கணிக்கிறாரா மனோஜ் பாண்டியன்?..ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் இன்றி வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!

இரு தலைமைகளையும் புறக்கணிக்கிறாரா மனோஜ் பாண்டியன்?..ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் இன்றி வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!

எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஈபிஎஸ், ஒபிஎஸ் இன்றி பேனரை வைத்திருப்பதால்  இரு தலைமைகளையும் புறம் தள்ளுகிறாரா? என்ற சர்ச்சையை அதிமுகவினரிடம் ஏற்படுத்தி வருகிறது.

ஜூலை 11:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்த ஒற்றை தலைமை கோஷத்தை அடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதற்கு பிறகு கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழி மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஈ.பி.எஸ் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். 

ஓ.பி.எஸ் மற்றும் ஆதரவாளர்கள் நீக்கம்:

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ் ஆனதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோன்று ஓ.பி.எஸ்க்கு ஆதராவாக இருந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைவரையும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் ஈ.பி.எஸ்.

ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோஜ் பாண்டியன். இவர்  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக தொடர்ந்து தம் நிலைப்பாட்டை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் ஒற்றைத் தலைமை சர்ச்சையிலும் மனோஜ் பாண்டியன் ஒபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்தார். இதனால் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

பேனரில் ஈ.பி.எஸ்ஸின் முகத்தை கிழித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்:

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஈ.பி.எஸ் நீக்கியதையடுத்து, கடந்த வாரம் தனது எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், உள்ளூர் நிர்வாகிகள் யாரும் வராத நிலையில் அவரது சொந்த ஊரில் இருந்து வந்த சிலருடன் எம்எல்ஏ அலுவலக அறையைப் பூட்டிக் கொண்டு ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ஓபிஎஸ் தொண்டர்கள் சிலர் எம்.எல்.ஏ அலுவலக முகப்பில் இருந்த பேனரில் இருந்த ஈபிஎஸ் படத்தை மட்டும் கிழித்தெறிந்து குப்பையில் வீசினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

பேனரை அகற்றி தன் படத்தை வைத்த மனோஜ் பாண்டியன்:

எம்.எல்.ஏ அலுவலக முகப்பில் இருந்த பேனர் கிழிக்கப்பட்டதையடுத்து , தற்போது முழு பேனரையும் அகற்றிய மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரின் படத்தையும் வைக்காமல் தமது அலுவலக பேனரில் தமது புகைப்படத்தையும், எம்ஜிஆர் ஜெயலலிதா செங்கோல் ஏந்தும் புகைப்படத்தையும் மட்டும் வைத்துள்ளார். இந்த பேனரில் அவருடைய தலைவர் ஓ.பி.எஸ் படம் இல்லாதது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இரு தலைமையையும் புறம் தள்ளுகிறாரா?:

அதிமுக தலைமை தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது மனோஜ் பாண்டியன் வைத்துள்ள இந்த பேனர், தன்னை கட்சியில் இருந்து நீக்கிய ஈ.பி.எஸ் மற்றும் இவருக்கு தலைவராக இருக்கும் ஓ.பி.எஸ் என இரு தலைமைகளையும் புறம் தள்ளிகிறாரா? என்ற சர்ச்சையை அதிமுகவினரிடையே ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பேனரில் ஏன் ஓ.பி.எஸ் படத்தை தவிர்த்தார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தி வருகிறது. எல்லா சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக இருந்த மனோஜ் பாண்டியன், தற்போது பேனரில் ஓ.பி.எஸ் புகைப்படத்தை தவிர்த்தது ஏன்? என்று குழப்பத்தில் உள்ளனர்.

அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன?:

ஆலங்குளம் எம்எல்ஏ  அலுவலகத்தில் புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஐ முற்றிலும் புறக்கணித்து இருப்பது மனோஜ் பாண்டியனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.