சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் அருந்தியதால் விபரீதம்... தாய், மகள் பரிதாபமாக உயிரிழப்பு...

கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் அருந்திய தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் அருந்தியதால் விபரீதம்... தாய், மகள் பரிதாபமாக உயிரிழப்பு...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த இளங்கோவன் - கற்பகவல்லி தம்பதிக்கு சண்முகபாண்டி என்ற மகனும், தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு தனியார் உணவகத்தில் இருந்து சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார் கற்பகவல்லி.

பின்னர் வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் சேர்த்து, அவரும் அவரது மகளும் சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவருக்கும் லேசான வயிறு எரிச்சல் ஏற்பட்டதால், அருகில் உள்ள பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியுள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இளங்கோவனின் வீடு, குளிர்பானம் வாங்கிய பெட்டிக்கடை மற்றும் சிக்கன் கிரேவி வாங்கிய உணவகம் ஆகியவற்றில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தாய்-மகள் சாப்பிட்ட சாப்பாடு, குளிர்பானம் ஆகியவற்றை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.