மகளிர் உரிமைத் தொகை; 2 கட்டமாக விண்ணப்பம் விநியோகம்!

மகளிர் உரிமைத் தொகை; 2 கட்டமாக விண்ணப்பம் விநியோகம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் விநியோகிக்கும் பணி இரண்டாம் கட்டமாக இன்று தொடங்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடங்கி,  வரும் 16 ம் தேதி வரை நடைபெறும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் 'செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்' பள்ளியில் முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 98 வார்டுகளில் முதல் கட்ட முகாம் நடைபெற்றது, எஞ்சிய 102 வார்டில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம் மற்றும் பதிவு நடைபெறுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சென்னையில் முதல்கட்ட முகாமில்  4 லட்சத்து 70 ஆயிரத்து 301 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2 ம் கட்டமாக சென்னையில் இன்று முதல் 724 பகுதிளுக்கான 1751  முகாம்கள் நடைபெறுகின்றன. 16 ம் தேதி வரை தன்னார்வலர்கள், வீடுகளுக்கு நேரில்  சென்று விண்ணப்பங்களை வழங்குவர். சில நேரங்களில் வீடுகளில் ஆட்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கு மீண்டும்  17 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை தன்னார்வலர்கள் வீடுதேடிச் சென்று விண்ணபங்களை வழங்குவர் என தெரிவித்தார். 

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 150 க்கும் மேற்பட்ட குழுக்கள் சென்னையில் மண்டலவாரியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 554 நகரும் குழுக்கள் உட்பட பலர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவை ஏற்படும் இடங்களில் மட்டும் காவலர்களை பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

இதையும் படிக்க:நடிகரிடம் பண மோசடி; பெண் வழக்கறிஞருக்கு ஜாமீன் மறுப்பு!