தடுப்பூசி போடாமல் மண்ணை தூவிய 'குடி'மகன்கள்... அதிரடி உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர்...

நீலகிரியில் கொரோனா தடுப்பூசி போட்டால்தான் சரக்கு வாங்க முடியும் என்று மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தடுப்பூசி போடாமல் மண்ணை தூவிய 'குடி'மகன்கள்... அதிரடி உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர்...

கொரோனா தொற்று காரணமாக இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.  அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பூசி முகாம்களை நடத்தி 100 சதவிகித தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கின்றன.

தற்போது 5 லட்சத்து71ஆயிரத்து 29 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப் பூசியும், 1லட்சத்து 42ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ள நிலையில், இன்னும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டால் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் நூறு சதவீத இலக்கை எட்டி விடமுடியும்,

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் இன்னும் 100 சதவித இலக்கை எட்ட முடியாத நிலையில் எப்படி இது சாத்தியமாகவில்லை என எண்ணிய நிர்வாகம் இதற்கான காரணத்தை  கண்டறிந்துள்ளது.

தடுப்பூசியை தொடர்ந்து நிராகரித்து வருபவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் பெரும்பாலான மதுபிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் கண்ணில் மண்ணை தூவியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒன்றிரண்டு நாட்களுக்கு மது அருந்த முடியாது என்பதால் தடுப்பூசி போடாமல் தவிர்த்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் தான் நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  

இன்று முதல் வரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மது வாங்குபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி குறைந்த பட்சம் ஒன்று மட்டுமாவது செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு ஒன்று முதல் ஒன்றரை கோடி வரையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று மற்றும் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  தங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் மிக வேதனை அளிப்பதாக குடிமகன்கள் தெரிவித்துள்ளனர்.