மர்ம காய்ச்சலுக்கு மருத்துவர் உயிரிழப்பு!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு.

தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 1 குழந்தை உட்பட 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரியும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற பயிற்சி மருத்துவர் நேற்றைய தினம் காய்ச்சல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறாத நிலையில் அவரது காய்ச்சல் குறித்து முழு தகவல் தெரியவில்லை. பயிற்சி மருத்துவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் நிபா காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பயிற்சி மருத்துவர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு கிர்த்தி சுரேஷ், அனிருத் பாராட்டு!