தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழுவினர் பரிந்துரை...

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழுவினர் பரிந்துரை...

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப் பிக்கப்பட்ட ஊரடங்கு, இன்னும் சில தினங்களில் முடிய உள்ளன. அதே வேளையில் தினசரி கொரோனா பாதிப்பும் சற்று குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி. பி. திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என, மருத்துவர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொற்று  தீவிரமாக உள்ள கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு தொடரும் என்றும், தொற்று தணிந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அரியலூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.