ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி- பத்திரமாக மீட்பு

கோவையில் தண்டவாளத்தில் மது போதையில் தூங்கிய நபர் மீது ரயில் கடந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி- பத்திரமாக மீட்பு

கோவை - மேட்டுப்பாளையம் இடையே தினமும் மெமோ ரயில் சேவை இயங்கி வருகிறது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், 1781 பேர் நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

 இந்த ரயில் சேவை நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அப்போது எதிரே வந்த ரயிலில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தண்டவாளத்தில் யாரோ ஒருவர் படுத்திருந்ததை பார்த்ததும் இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்ட போது, ரயில் பெட்டி மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது. 

ரயில் நின்ற பின்பு நான்காவது பெட்டியில் இருந்த தர்மராஜ், மற்றும் ரயில் பணியாளர்கள் ஆகியோர் ரயிலின் அடியில் படுத்துறங்கிய போதை நபரை மீட்டனர். இருப்பினும் அவர் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பியது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.